ராகுல் காந்தி விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்றிரவு அமைதி பேரணி நடத்த முடிவு


ராகுல் காந்தி விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்றிரவு அமைதி பேரணி நடத்த முடிவு
x

ராகுல் காந்தி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் இன்றிரவு 7 மணியளவில் செங்கோட்டையில் இருந்து அமைதி பேரணி நடத்த முடிவு செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம் கடைப்பிடிப்பது, கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் இன்றிரவு 7 மணியளவில் செங்கோட்டையில் இருந்து டவுன் ஹால் வரை அமைதி பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.

அடுத்த 30 நாட்களுக்கு மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் நாடு முழுவதும் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஜெய் பாரத் சத்யாகிரஹம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.


Next Story