"மக்களை வெறுப்புடன் இணைக்க காங்கிரஸ் விரும்புகிறது"- காக்கி உடை தீப்பற்றி எரியும் பதிவிற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்
காங்கிரஸ் நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் மீது வெறுப்பை வளர்த்து வருவதாக மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், காக்கி டிரவுசர் உடையில் (முன்னர் இருந்த ஆர்எஸ்எஸ் சீருடையை குறிக்கும் விதமாக) தீப்பிடிக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளது.
இந்தப் படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ், "நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும். அந்த இலக்கை படிப்படியாக அடைவோம்" என தெரிவித்து இருந்தது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸை விமர்சித்த பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, "இந்த நாட்டில் வன்முறை ஏற்பட வேண்டுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்" என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பாஜகவை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா இன்று கூறுகையில், " ஆர்எஸ்எஸ் வளர்ச்சிக்கு ஒரே காரணம் உண்மை மட்டுமே நமது கொள்கையாக இருப்பது. அதனால்தான் மக்களும் அமைப்பை ஆதரிக்கிறார்கள்.
காங்கிரஸ் மக்களை வெறுப்புடன் இணைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக நம்மீது வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவர்களின் குடும்பம் நமது சங்கத்தை மிகவும் இகழ்ந்தனர். ஆர்எஸ்எஸ்ஸைத் தடுக்க கடுமையாக முயற்சித்தார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் நிறுத்தவில்லை, வளர்ந்து கொண்டே இருந்தது" என தெரிவித்துள்ளார்.