நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம்; ராகுல் காந்தி பேச்சு
நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பெங்களூரு:
நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகிழ்ச்சி அளிக்கிறது
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் பிறந்த நாள் பவள விழா தாவணகெரேயில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சித்தராமையாவை வாழ்த்தி பேசியதாவது:-
இந்த விழாவில் சித்தராமையாவை கட்டி அணைத்து டி.கே.சிவக்குமார் பிறந்த நாள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த டி.கே.சிவக்குமார் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மாநிலத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முழுவதுமாக ஒற்றுமையாக உள்ளது.
வெறுப்பை பரப்ப மாட்டோம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தூய்மையாகவும், நேர்மையாகவும் ஆட்சியை நடத்துவோம். மக்களின் நலனுக்காக பாடுபடுவோம். நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம். கர்நாடகத்தில் குறிப்பாக தட்சிண கன்னடாவில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் அங்கு முன்பு நடைபெறவில்லை.
அமெரிக்காவில் கர்நாடகம் பற்றி கேட்டால், நாங்கள் தற்போது நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை பார்த்தது இல்லை என்று சொல்வார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்தில் நல்லிணக்கம் இருந்ததாக கூறுவார்கள். சித்தராமையா வயதாக வயதாக இளமையாக காட்சி அளிக்கிறார். அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
டி.கே.சிவக்குமார்
இந்த விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், "கர்நாடக சட்டசபை தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் நாங்கள் எதிர்கொள்வோம். நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி கட்சியை வெற்றி பெற செய்வோம். கர்நாடகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். சித்தராமையா அனைத்து சமூகங்கள் மற்றும் மதங்களின் தலைவர். மாநில மக்களுக்கு இன்னும் சேவையாற்றும் சக்தி அவருக்கு கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். கர்நாடகத்தில் ஊழல் பா.ஜனதா அரசை வெளியேற்ற அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்" என்றார்.