விமர்சனங்கள் எழுந்த போதும் கடும் குளிரிலும் டி- ஷர்ட் அணிவது ஏன்...? ராகுல்காந்தி விளக்கம்
யாத்திரையின் போது அவர் கடும் குளிரிலும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து செல்கிறார்.
புதுடெல்லி,
மார்கழி மாதத்தில் பனி அதிகமாக இருப்பது வழக்கமானதுதான். ஆனால், வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனி வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
செயற்கைக்கோள் படங்களை பார்த்ததில், பஞ்சாப் மற்றும் அதைஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானில் இருந்து அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக பீகார் மாநிலம் வரை பனிஅடுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், வடமாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற குளிருக்கு பெயர் பெற்ற மாநிலங்களின் வெப்பநிலையை விட குறைவாக உள்ளது. இதனால், டெல்லி மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் கடும் குளிரிலும் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி. யாத்திரையின் போது அவர் கடும் குளிரிலும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து செல்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
கடும் குளிரிலும் நான் ஏன் டிஷர்ட் மட்டுமே அணிகிறேன் என்று விமர்சனங்கள் எழுகின்றன. அதற்கு நானே விளக்கம் தருகிறேன். நான் யாத்திரையை தொடங்கும்போது வெப்பமான வானிலையே இருந்தது.
ஆனால் நான் பல மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்தை தொடும் போது சற்று பனிகாலம் ஆரம்பித்தது. மத்தியப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு மூன்று ஏழைச் சிறுமிகளைப் பார்த்தேன். நான் அவர்களை என்னுடன் அரவணைத்தபோது அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அன்று ஒரு முடிவு எடுத்தேன். என்னால் தாங்க முடியாமல் நடுங்க வைக்கும் குளிர் என்னை வாட்டும்வரை டி-ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்து கொண்டேன்.
அன்று குளிரில் நடுங்கிய சிறுமிகளுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குளிரில் நடுங்கும்போது நானும் குளிரில் நடுங்குவேன். நீங்கள் ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் வரும் நாளன்று நானும் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன் என்பதே அந்த செய்தி.
ஊடகங்கள் நான் டி-ஷர்ட் அணிவதை தான் விமர்சிக்கின்றன. ஆனால் என்னோடு யாத்திரையில் கிழிந்த ஆடையில் நடக்கும் விவசாயிகள், தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை.
நான் டி-ஷர்ட் அணிவது பிரச்சினையும் அல்ல, விவாதப் பொருளும் அல்ல. உண்மையான பேசும் பொருள் விவசாயிகளும், ஏழைத் தொழிலாளர்களும், குழந்தைகளும் இன்னமும் ஏன் கிழிந்த ஆடைகளில், ஸ்வெட்டர் கூட இல்லாமல் தவித்து வருகின்றன என்பதே எனது கேள்வி என்றார்.