மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி: சோனியா காந்தியும் இன்று கலந்து கொள்கிறார்


மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி: சோனியா காந்தியும் இன்று கலந்து கொள்கிறார்
x

2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார்.

பெங்களூரு,

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி இருந்தார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார். அவரும் ரெசார்ட்டில் தான் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ராகுல், சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பின்னர் எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார்.

சோனியா காந்தி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை காங்கிரஸ் பொது செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கி உள்ளார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் இன்று பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்கி உள்ளது.


Next Story