விவசாயிகளின் தோல்விகள்.. இளைஞர்களின் கவலைகள்... நடைபயணத்தில் எதிரொலித்தன - ராகுல்காந்தி
மராட்டிய நடைபயணம் குறித்த அனுபவத்தை ராகுல் காந்தி அறிக்கை மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மராட்டியத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி தொடங்கினார். மராட்டியத்தில் நேற்று முன்தினம் நடைபயணம் முடிவு பெற்றது.
இந்த நிலையில் மராட்டிய நடைபயணம் குறித்த தனது அனுபவத்தை ராகுல் காந்தி அறிக்கை மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக மோசமடைந்துவரும் விவசாயிகளின், நிச்சயமற்ற விலைகள் மற்றும் மோசமான நேரங்களில் உதவும் பயிர்காப்பீட்டு திட்டங்களின் தோல்விகள் ஆகியவை எனது நடைபயணத்தில் எதிரொலித்தன. இதேபோல் கடின உழைப்பு இருந்தபோதிலும் தங்கள் கனவுகளை அடைய முடியுமா என கவலைப்படும் மாநில இளைஞர்கள் மற்றும் பழங்குடியினர்களின் கவலைகள் செவிகொடுத்து கேட்கப்பட்டது.
இந்த துயரங்களுக்கு மூலகாரணம் செல்வத்தையும், அதிகாரத்தையும் ஒரு சிலரின் கைகளில் குவிக்கும் பா.ஜனதா அரசின் நடவடிக்கைகளே ஆகும். கலாசாரம், மதம், சாதி மற்றும் மொழியை பயன்படுத்தி இந்தியர்களை ஒருவருக்கொருவர் பிளவுபடுத்தும் அவர்கள் செயல்திட்டங்கள் காரணமாக இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற தீய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மராட்டியத்தில் உள்ள வளமான முற்போக்கு பாரம்பரியமும், பல அர்ப்பணிப்புள்ள சமூக அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள கலைஞர்களும் தடையாக உள்ளனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மராட்டியத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கியது. மராட்டிய மன்னரின் தாயார் ராஜ்மாதா ஜிஜாபாய் பிறந்த புல்தானா மாவட்டத்தில் இருந்து இந்த நடைபயணம் வெளியேறி உள்ளது.
சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் ஆன்மிக தலைவர்களான சாகுஜி மகராஜ், ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே, அகில்யாபாய் ஹோல்கர், பாபாசாகேப் அம்பேத்கர், ஷீரடி சாய்பாபா, கஜானன் மகாராஜ் மற்றும் பலரிடமிருந்து மராட்டியம் உத்வேகம் பெற்றுள்ளது.
பல நூற்றாண்டுகளாக இந்த பெரிய மனிதர்கள் பெண் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதிக்கான செய்தியை பரப்பி உள்ளனர். மராட்டிய நடைபயணத்தின்போது வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை பார்வையிட்டேன். வர்காரிகள், பிக்குகள் மற்றும் சூபிகளுடன் நடந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.