காங்கிரசை ஒன்றுபடுத்தும் பணியை முதலில் ராகுல் காந்தி செய்ய வேண்டும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


காங்கிரசை ஒன்றுபடுத்தும் பணியை முதலில் ராகுல் காந்தி செய்ய வேண்டும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

காங்கிரசை ஒன்றுபடுத்தும் பணியை முதலில் ராகுல் காந்தி செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' (ஒற்றுமை) பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை தற்போது கர்நாடகத்திற்குள் பயணிக்கிறது.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில்,

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை எதற்காக நடத்துகிறாரோ தெரியவில்லை. இதில் அரசியல் ஆதாயம் தேடுவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறோம் என்று சொல்கிறவர்களுக்கு நாட்டின் வரலாறு தெரியுமா?.

நாட்டை 2 ஆக பிளவுப்படுத்திய காங்கிரசார் தற்போது ஒற்றுமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துவது வெட்கக்கேடானது. தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தங்களின் அங்கீகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி என்ன தான் முயற்சி மேற்கொண்டாலும் கர்நாடகத்தில் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ராகுல் காந்தி முதலில் காங்கிரசை ஒன்றுபடுத்தும் பணியை செய்ய வேண்டும். பயப்பட மாட்டோம் முதலில் தங்கள் கட்சியில் உள்ள குழப்பங்கள், குளறுபடிகளை சரிசெய்து கொண்டு, பின்னர் நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story