கர்நாடகாவில் தனது பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி
கர்நாடகாவில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.
ஊட்டி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.
கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து அவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடியை ஏந்தி சென்றனர். நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாக கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.
கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரில் இருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார். கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.