நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பின் நெகிழ வைத்த ராகுல்காந்தியின் செயல்


நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பின் நெகிழ வைத்த ராகுல்காந்தியின் செயல்
x

18வது மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இன்று வரிசையாக பதவியேற்றனர்.

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. இந்நிலையில் புதிய மக்களவை எம்.பி.,க்களின் பதவியேற்கும் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட 280 பேர் மக்களவையில் எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை எம்.பி.,க்கள் இன்று பதவியேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் இன்று தமிழில் எம்பிக்களாக உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரலி தொகுதி எம்.பி.,யாக இன்று பதவியேறுக் கொண்டார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். ராகுல் காந்தி பதவியேற்கும்போது, காங்கிரஸ் எம்.பி.,க்களும், கூட்டணி கட்சி எம்பிக்களும் மொத்தமாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார். தொடர்ந்து எம்.பி.,யாக பதவியேற்ற ராகுல் காந்தி தற்காலிக சபாநாயகருக்கு கை கொடுத்தார். பின்னர் சபாநாயகரின் அருகில் இருந்த அதிகாரி ஒருவருக்கும் ராகுல் காந்தி கைகொடுத்தார்.

எம்.பி.,க்கள் எல்லாம் சபாநாயகருக்கு மட்டும் கைகொடுத்து சென்ற நிலையில், ராகுல் காந்தி மட்டும் சபாநாயகர் அருகில் நின்ற அதிகாரிக்கு சம மரியாதை கொடுத்து கைகொடுத்து சென்றது எம்.பி.,க்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Next Story