மணிப்பூரில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்: காங்கிரஸ் கண்டனம்


மணிப்பூரில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்: காங்கிரஸ் கண்டனம்
x

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது வருந்தத்தக்கது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று மணிப்பூர் சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல்காந்தி.

இந்நிலையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது வருந்தத்தக்கது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதால், ராகுல் காந்தி மக்களை சந்திக்க செல்வதை தடுத்து நிறுத்துவதா?. ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாகவே 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றார் ராகுல்காந்தி. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது வருந்தத்தக்கது என்றார்.

மணிப்பூர் சென்ற ராகுல்காந்தியை அப்பகுதி மக்கள் இருபுறமும் நின்று கைகளை அசைத்து வரவேற்றனர். மக்கள் வரவேற்கும் போது ராகுல்காந்தியை ஏன் தடுத்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.


Next Story