ராய்ச்சூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை
ராய்ச்சூரில் நேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை கர்நாடகத்தில் நிறைவு பெறுகிறது.
பெங்களூரு:
ராகுல்காந்தி பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்று, 19 நாட்கள் நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த மாதம் 30-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. அன்றைய தினம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரியில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் ஆந்திராவில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மீண்டும் கர்நாடகத்திற்கு வந்தது. அதாவது கர்நாடக மாநில எல்லையில் உள்ள ராய்ச்சூரில் நேற்று முன்தினம் பாதயாத்திரை நடத்தினார்.
ராய்ச்சூரில் நடைபெற்றது
நேற்று 17-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டம் யரகேலா கிராமத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
பின்னர் சிறிது நேரத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும், ராகுல்காந்தி பாதயாத்திரையில் இணைந்தார். காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் 10 மணியளவில் ராய்ச்சூரில் உள்ள ஓட்டலில் அவர் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தார். அதன்பிறகு, மாலை 4 மணிக்கு பாதயாத்திரை மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்
இந்த நிலையில், யரகேராவில் நேற்று பாதயாத்திரை தொடங்கிய சிறிது நேரத்தில் ராகுல்காந்தியுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சீருடை அணிந்து கொண்டு இந்த பாதயாத்திரைக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தார்கள். பின்னர் தேசிய கொடியை பிடித்து கொண்டு ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ராகுல்காந்தியும் சிறிது தூரம் ஓடினார்.
முன்னதாக நேற்று மதியம் ராய்ச்சூரில் சிறுபான்மையின பிரமுகர்களுடனும், ராய்ச்சூரில் வசிக்கும் தேவதாசி பெண்களையும் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். தேவதாசி பெண்கள் தங்களது குறைகளை ராகுல்காந்தியிடம் தெரிவித்தார்கள். அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார். நேற்று இரவு ராய்ச்சூர் மாவட்டம் யாக்னூரில் உள்ள அனந்தா தொடக்க பள்ளியில் ராகுல்காந்தி தங்கினார்.
கர்நாடகத்தில் இன்றுடன் நிறைவு
ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு ராய்ச்சூர் மாவட்டம் பி.எச்.இ.எல். அலுவலகத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்க உள்ளார். காலை 10 மணியளவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்தை சென்றடைய உள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை இன்று காலையுடன் நிறைவு பெற உள்ளது. இன்று முதல் தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்தி 17 நாட்களில் 21 சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். ராகுல்காந்தியின் பாதயாத்திரை மூலம் கர்நாடக காங்கிரசுக்கு புதிய பலம் கிடைத்திருப்பதாக அக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.