ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பாதயாத்திரை' - சோனியா காந்தி வாழ்த்து
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து தொடங்கிவைத்தார்.
புதுடெல்லி,
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். இந்த நடைபயணத்தை காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பாதயாத்திரைக்கு' காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதில் வருத்தம் அடைகிறேன். இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துயிர் பெரும் . தீர்மானத்தில் ஒற்றுமையாக முன்னேறி செல்வோம்.
139 கோடி இந்தியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்தால், அதை அடைவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 'பாரத் சோடோ' அனைத்து குரல்களுக்காகவும் ஒரே குரலில் போராடத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். குமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரையை நிறைவு செய்ய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.