ராகுல் காந்தியின் பதவி பறிப்பு-"உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருப்பதில்லை... காங். தலைவர் கடும் கண்டனம்


ராகுல் காந்தியின் பதவி பறிப்பு-உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருப்பதில்லை... காங். தலைவர் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 24 March 2023 3:10 PM IST (Updated: 24 March 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளி கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளது. மக்களவையில் ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது,

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அனைத்து வழிகளையும் மேற்கொண்டது. உண்மையை பேசுபவர்களை வைத்திருக்க அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருப்பதில்லை. காங்கிரஸ் தொடர்ந்து உண்மையையே பேசும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


Next Story