மகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தது போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல் காந்தி!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பெங்களூரு,
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் காலை கர்நாடகத்திற்குள் நுழைந்தது.
கர்நாடகத்தில் 3-வது நாளாக இன்று காலை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுராவில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பந்தனவாலு காதி கிராமோத்யோக்கில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
மகாத்மா காந்தி நமக்கு சத்தியம் மற்றும் அகிம்சை வழியில் நடக்கக் கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்கினார்.
தேசத் தந்தை எவ்வாறு அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தாரோ அதேபோல, இப்போது நம் இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று காந்தி ஜெயந்தியான இன்று, நாங்கள் சபதம் செய்கிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, மகாத்மா காந்தியின் வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார்.