ராஜஸ்தான்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மீது லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று பார்மீர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்கச் சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் காரில் பயணம் செய்தனர்.
பார்மர் மாவட்டத்தின் குடா மலானி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவீட்டரில் அவர் கூறும்போது, "ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமை தரட்டும்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.