ராஜஸ்தான்: 17 வயது சிறுமி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தானும் சுட்டு தற்கொலை


ராஜஸ்தான்: 17 வயது சிறுமி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தானும் சுட்டு தற்கொலை
x

துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இளைஞர் கடந்த மாதம் வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, தான் காதலித்து வந்த சிறுமியை அப்பகுதியில் உள்ள பண்ணைக்கு அதிகாலை 4 மணிக்கு அழைத்துள்ளார். உடனே அந்த சிறுமி வந்ததும், சிறுமி மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றார்.

பின்னர், சிறுமியில் குடும்பத்தினருக்கு போனில் அழைத்து, அவள் இறந்துவிட்டதாகவும், அவளின் உடல் பண்ணையில் கிடப்பதாகவும் கூறினார். இதையடுத்து, வீட்டின் மாடிக்கு சென்ற அவர், தலையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சிறுமியின் குடும்பத்தினர் பண்ணைக்கு விரைந்தனர். படுகாயமடைந்த நிலையில் சிறுமி இருப்பதைக் கண்ட அவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், நேராக வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், சிறுமியில் உடல்நிலை மோசமடைந்ததால், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியின் காதல் விவகாரம் உள்ளூர் மக்களுக்குத் தெரிந்தால், தங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்பதால், அவர்கள், சிறுமியை முதலில் வீட்டிற்கு அழைத்துச்சென்று இருக்கலாம் என்றும், துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நபரும் அவரது குடும்பத்தினரால் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமிக்கும், இளைஞருக்கும் இடையே காதல் இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறிய போலீசார், ஆனால், அந்த நபர் ஏன் சிறுமியை சுட்டு, பின் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story