மைசூரு கோர்ட்டில் மயங்கி விழுந்த நடிகை ராக்கி சாவந்த்
பாலியல் வழக்கில் கணவன் கைதானதை தொடர்ந்த மைசூரு கோர்ட்டில் நடிகை ராக்கி சாவந்த் ஆஜரானார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு:
பாலியல் வழக்கில் கணவன் கைதானதை தொடர்ந்த மைசூரு கோர்ட்டில் நடிகை ராக்கி சாவந்த் ஆஜரானார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் புகார் வழக்கு
மைசூரு நகரை சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆதில்கான் துரானி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இந்தி திரைப்பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2 மாதங்கள் ஒற்றுமையாக இருந்த இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவன் ஆதில்கான் துரானி மீது ராக்கி சாவந்த் பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி செய்ததாக மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதில் கான் துரானியை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மும்பை கோர்ட்டு அவருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து அவர் மும்ைப சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது
இந்நிலையில் மைசூரு வி.வி.புரம் போலீசில் நடிகை ராக்கி சாவந்த் அளித்த புகாரின் பேரில் ஆதில்கான் துரானியை கைது செய்ய போலீசார் முடிவு ெசய்தனர். இதற்காக மும்பை சென்ற வி.வி.புரம் போலீசார் ஆதில்கானை கைது செய்தனர். பின்னர் அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி மைசூருவுக்கு புறப்பட்டனர்.
அவரை நேற்று மைசூருவுக்கு அழைத்து வந்த போலீசார், மைசூரு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை ராக்கி சாவந்த்தும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது ஆதில்கான் துரானி மற்றும் ராக்கி சாவந்த் தரப்பில் அவரவர் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஆதில்கான் துரானிக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மைசூரு சிறையில் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த, ராக்கி சாவந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உரிய தண்டனை கிடைக்கவேண்டும்
கணவன் மீது அளித்த புகார் தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு ஆஜராக மைசூருவிற்கு வந்தேன். என்னை ஆதில்கான் முறையான ஆதாரங்களுடன் திருமணம் செய்து கொண்டார். இதற்காக ஆவணங்கள் என்னிடம் உள்ளது. நான் இந்து என்பதால் அவரது தந்தைக்கு என்னை பிடிக்கவில்லை. இது தொடர்பாக பல முறை ஆதில்கான் துரானியின் தந்தையிடம் பேசினேன். ஆனால் அவர் என்னை ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து ஆதில்கான் துரானி என்னை கொடுமை படுத்த தொடங்கினர். என்னிடம் இருந்து ரூ.1.65 கோடி வரை பணம் பறித்துள்ளார். இதுவரை ஒரு பைசா கூட திருப்பி கொடுக்கவில்லை. இதை கேட்டால் என்னை அடித்து உதைத்தார். மேலும் வலுகட்டாயமாக என்னை பலாத்காரம் செய்தார். இந்த கொடுமை தாங்க முடியாமல்தான் மும்பை மற்றும் மைசூரு போலீசில் புகார் அளித்தேன்.
மயங்கி விழுந்த ராக்கி சாவந்த்
மைசூரு மக்களை ஆதில்கான் துரானி தவறாக கூறினார். நான் நேரில் வந்து பார்த்த பின்னர்தான் உங்கள் நல்ல உள்ளம் தெரிந்தது. எனக்கு மைசூரு கோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் ஆதில்கான் துரானிக்கு ஜாமீன் கிடைக்க கூடாது. நீதிபதி அவருக்கு உரிய தண்டனை கிடைக்க செய்யவேண்டும். ஆதில்கான் துரானி செய்த தவறுக்கு அவர் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
அப்போது திடீரென்று நடிகை ராக்கி சாவந்த் மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதையடுத்து ராக்கி சாவந்த் எழுந்தார். பின்னர் உடன் இருந்தவர்களை அவரை மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மைசூரு கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.