பா.ஜனதா அரசை கவிழ்க்கும் சக்தி ரமேஷ் ஜார்கிகோளிக்கு உள்ளது- சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி சொல்கிறார்
பா.ஜனதா அரசை கவிழ்க்கும் சக்தி ரமேஷ் ஜார்கிகோளிக்கு உள்ளது என்று சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி சொல்கிறார்
பெலகாவி: பெலகாவி மாவட்டம் கோகாக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தில் 4 சகோதரர்களும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால் 4 பேரின் செயல்பாடுகள், எண்ணம், கொள்கை வேறு, வேறு ஆகும். எங்களது சகோதரர்களில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு மட்டும் அரசை கவிழ்க்கும் சக்தி இருக்கிறது. அவர், மீண்டும் ஒரு முறை பா.ஜனதா அரசை கவிழ்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களை மீண்டும் அவர் செய்தால் வரவேற்பேன். ரமேஷ் ஜார்கிகோளி தவிர மற்ற 3 பேரும் அரசை கவிழ்க்கும் செயல்களில் ஈடுபடுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி ஆவார். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த அவர், நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தார். இளம்பெண் கூறிய கற்பழிப்பு புகார் காரணமாக ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் அவர் இருப்பதால், கூட்டணி ஆட்சியை போன்று பா.ஜனதா அரசையும் கவிழ்க்க வேண்டும் என்று சதீஸ் ஜார்கிகோளி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
======================