பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை
பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஜயநகர்:
விஜயநகர் மாவட்டம் அகரிபொம்மனஹள்ளி டவுன் பகுதியில் 55 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். அவர் கூலி வேலை பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் நாயக் (வயது 28) என்பவர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த பெண், அகரிபொம்மனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லோகேஷ் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டதால் மிகுந்த மன வேதனையுடன் அந்த பெண் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், தனது வீட்டில் வைத்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அகரிபொம்மனஹள்ளி போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலாத்காரம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட அவமானத்தில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.