காஷ்மீர்: வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் - வைரல் வீடியோ
காஷ்மீரில் பயங்கரவாதியின் சகோதரர் தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.
ஸ்ரீநகர்,
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீரில் தேடப்படும் பயங்கரவாதியின் சகோதரர் தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காஷ்மீரின் சோர்பூரை சேர்ந்த ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி ஜாவித் மமுத். பல்வேறு வழக்குகளில் 2009ம் ஆண்டு முதல் ஜாவித் மமுத் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
பயங்கரவாதி ஜாவித்தின் சகோதரர் ரியாஸ் மமுத். இவர் சோர்பூரில் உள்ள தனது வீட்டில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என் மனதில் இருந்து மூவர்ணக்கொடியை நான் ஏந்துகிறேன். இங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் 14ம் தேதி நான் என் கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கமாக இந்த நாட்களில் இங்கு 2 முதல் 3 நாட்கள் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்பிருந்த கட்சிகள் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன.
என் சகோதரர் 2009ம் ஆண்டு பயங்கரவாதியாக மாறினார். அதன் பின் அவர் பற்றி எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரோடு இருந்தால் உடனடியாக திரும்பி வருமாறு நான் கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீரில் நிலைமை மாறிவிட்டது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.