கடனுக்கான வட்டியை மீண்டும் உயர்த்தியது, ரிசர்வ் வங்கி வீடு, வாகன, தனிநபர் கடன்களின் தவணை காலம் அதிகரிக்கும்


கடனுக்கான வட்டியை மீண்டும் உயர்த்தியது, ரிசர்வ் வங்கி வீடு, வாகன, தனிநபர் கடன்களின் தவணை காலம் அதிகரிக்கும்
x
தினத்தந்தி 1 Oct 2022 4:15 AM IST (Updated: 1 Oct 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியது.

மும்பை,

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணை காலம் அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

குழு உறுப்பினர்கள் 6 பேரில், 5 பேர் ஆதரவுடன் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு இதுதான் அதிகமான வட்டி சதவீதம் ஆகும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து 4-வது தடவையாக வட்டி உயர்ந்துள்ளது. 4 தடவையிலும் சேர்த்து மொத்தம் 1.90 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும்போதெல்லாம், அதற்கேற்ப, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்துவது வழக்கம்.

எனவே, மேற்கண்ட கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது. அதற்கேற்ப கடனை திருப்பிச்செலுத்தும் தவணை காலம் உயரும்.

ரெபோ ரேட் உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த இரண்டரை ஆண்டுகளில், கொரோனா, உக்ரைன் போர் என உலகம் 2 பேரதிர்ச்சிகளை சந்தித்துள்ளது. இவை உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

தற்போது, முன்னேறிய நாடுகளின் மத்திய வங்கிகள் எடுக்கும் நிதி கொள்கை முடிவுகள், 3-வது அதிர்ச்சியாக அமைந்துள்ளன. இந்த முடிவுகள் உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன.

இந்த பின்னணியில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ ரேட் விகிதத்தை உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறோம். வளர்ச்சியை கருத்தில்கொண்டும், இம்முடிவை எடுத்துள்ளோம். நாட்டில் பணப்புழக்கம் நன்றாக உள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு நீடித்தால், வருகிற மாதங்களில் விலைவாசி அழுத்தம் குறையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story