கல்யாண கர்நாடக வாரிய நிதி முறைகேடு விசாரணையை எதிர்கொள்ள தயார்; பசவராஜ் பொம்மை பேட்டி
கல்யாண கர்நாடக வாரிய நிதி முறைகேடு விவகாரத்தில் எந்த விதமான விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அறிமுகம் செய்தோம்
கல்யாண கர்நாடக வாரிய நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதுகுறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முறைகேடு நடந்திருந்தால் அதுபற்றி எந்த வகையான விசாரணை வேண்டுமானாலும் நடத்தட்டும். சமூக நலத்துறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த நானே புகார் அளித்தேன். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அதுபற்றி விசாரணை நடைபெறவில்லை.
எந்த விதமான விசாரணையை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் விசாரணை பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும். வளா்ச்சி பணிகளுக்கு அந்த விசாரணை தடையாக இருக்கக்கூடாது. நமது கலாசாரம், பண்பாடுகளை அடிப்படையாக கொண்டு நாங்கள் பள்ளி பாடத்திட்டத்தில் சில விஷயங்களை அறிமுகம் செய்தோம்.
பொறுப்பான அரசு
ஆனால் தற்போதைய புதிய அரசு அதை மாற்ற புதிய குழு அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த சமூகமே உரிய பதிலடி கொடுக்கும். பாடத்திட்டத்தை அடிக்கடி மாற்றுவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இந்த பொறுப்பான அரசு என்ன செய்ய போகிறது என்பதை பார்க்கலாம்.
கல்வித்துறை நிபுணர்களின் கருத்துகள் அடிப்படையில் தான் தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. காங்கிரசின் 5 முக்கிய வாக்குறுதிகளை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த இலவச திட்டங்களை அமல்படுத்தினால் வளர்ச்சி பணிகள் முடங்கும் நிலை உண்டாகும்.
மந்திரிசபை கூட்டம்
1-ந் தேதி (நாளை) மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. அதில் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம். இலவச திட்டங்களுக்கு எதிராக அரசே மறைமுகமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.