'மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்' - கெஜ்ரிவால் அறிவிப்பு
கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காக ‘மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் காணொலிக்காட்சி வழியாக நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுகாதார சேவைகளையும், கல்வியையும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார். அவற்றை இலவசங்கள் என அழைப்பதை மத்திய அரசு தயவு செய்து நிறுத்த வேண்டும்.
பெரிய அளவில் அரசு பள்ளிக்கூடங்களை திறப்பது அவசியம். அவற்றை மேம்படுத்தவும் வேண்டும். கவுரவ ஆசிரியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது இந்தியா பணக்கார நாடாக முடியும்.
இவற்றையெல்லாம் 5 ஆண்டுகளில் செய்து முடிக்க முடியும். நாங்கள் அதைச் செய்திருக்கிறோம். அரசு பள்ளிக்கூடங்கள், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் எங்களது நிபுணத்துவத்தை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.