வீடுகளில் திருடிய ரூ.68 லட்சம் பொருட்கள் மீட்பு
பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய, நேபாளத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் மதிப்பிலான திருட்டு பொருட்களை மீட்டனர்.
பெங்களூரு:-
6½ கிலோ வெள்ளி
பெங்களூரு வித்யரண்யபுரா பகுதியில் வசித்து வருபவர் நந்தன்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இந்த நிலையில் அவர் கடந்த 6-ந் தேதி குடும்பத்துடன் தொட்டபள்ளாப்புராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து அறிந்த மர்மகும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 990 கிராம் தங்க நகைகள், 6½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதற்கிடையே வீட்டிற்கு திரும்பிய நந்தன் குமார், வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோவில் இருந்த தங்க, வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக வித்யரண்யபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.
நேபாளத்தை சேர்ந்தவர்கள்
மேலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே எலகங்கா மண்டல துணை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது திருட்டில் ஈடுபட்டவர்கள் நேபாத்தில் உள்ளது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்தனர்.
அங்கு சென்ற அவர்கள் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மோகன் பிஸ்வகர்மா (வயது 28), ஜனக் ஜோஷி (26), சீதாராம் ஜெய்சி (43), கமல் என்கிற கமல் சிங் (48) மற்றும் பிபேக் ராஜ் ஆகிய 5 பேர் என்பது தெரிந்தது.
மேலும் நேபாளத்தை சேர்ந்த அவர்கள் பெங்களூருவில் மகாதேவபுரா, ஆர்.டி.நகர், கோரமங்களா, எலகங்கா நியூ டவுன், வித்யரண்யபுரா பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இதுமட்டுமல்லாது மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களிலும் கைவரிசை காட்டி இருந்தது தெரிந்தது.
ரூ.60 லட்சம் பொருட்கள்
அவர்களிடம் இருந்து ரூ.29¾ லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த கைகெடிகாரங்கள் உள்பட ரூ.68 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் மீட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மீது பெங்களூருவில் மட்டும் 5 வழக்குகளும், பிற மாநிலங்களில் 2 வழக்குகளும் பதிவாகி இருந்தது தெரிந்தது. இதன் மூலம் பெங்களூருவில் நிலுவையில் இருந்த திருட்டு வழக்குகளில் தீர்வு கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.