கர்நாடக தேர்தலில் பிரசாரம் எதிரொலி: பாஜக புகார்; சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கர்நாடக தேர்தலில் சோனியாகாந்தி பிரசாரத்தை சுட்டிக்காட்டி, காங்கிரசின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் கமிஷனில் பா.ஜனதா மனு அளித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று பேசினார். இத்தகவல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ 'டுவிட்டர்' பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சோனியாகாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தலைைமயிலான பா.ஜனதா குழு, தேர்தல் கமிஷனில் நேற்று மனு கொடுத்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவின் மிக முக்கியமான உறுப்பு மாநிலம், கர்நாடகா. ஒரு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாக்க அழைப்பு விடுப்பது, பிரிவினைக்கு அழைப்பு விடுவதாக அர்த்தம். அத்தகைய அழைப்பு, ஆபத்தான, மிகக்கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதற்காக, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியாகாந்தியின் பேச்சு இடம்பெற்ற காங்கிரசின் 'டுவிட்டர்' பக்க பதிவையும் பா.ஜனதா சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் புகார் தொடர்பாக சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.