ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக வெளியான செய்தி தவறு...மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி
ரூ. சுமார் 88,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஏப்ரல் 2015 டிசம்பர் 2016 வரை அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ரூ. சுமார் 88,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அச்சகங்கள் குறித்து ஆர்டிஐ கீழ் பெறப்பட்ட தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மனோரஞ்சன் ராய் என்ற செயற்பாட்டாளர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில், மூன்று பணம் அச்சடிக்கும் ஆலைகளில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் 8,810.65 மில்லியன் தாள்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரிசர்வ் வங்கி ஆவணங்களின்படி, 500 ரூபாய் நோட்டுகள் 7,260 மில்லியன் தாள்கள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. ஆக, சுமார் 88,032.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எங்கே சென்றன? அவ்வளவு நோட்டுகளும் தொலைந்துவிட்டனவா என நேற்று சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், 88,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் தொலைந்துவிட்டதாக வெளியான புகார்களை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நோட்டு அச்சடிக்கும் ஆலைகளில் இருந்து நோட்டுகள் காணாமல் போனதாக ஊடகங்களில் பரவும் தகவல்களில் உண்மை இல்லை" என்று தெரிவித்துள்ளது.
நோட்டு அச்சகங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அச்சகங்களில் இருந்து வெளியாகும் நோட்டுகளுக்கு முழுமையாக கணக்கு இருப்பதாகவும், நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு விநியோகிக்க பலமான அமைப்புகள் இருப்பதாகவும், நோட்டுகள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகிப்பு கண்காணிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், இது போன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்பும்படி பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.