கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண பணிகள் மும்முரம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
மழை பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண பணிகள் மும்முரமாக நடப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மழை பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண பணிகள் மும்முரமாக நடப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
துரிதமாக மேற்கொள்ள உத்தரவு
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் வருவாய்த்துறை மந்திரி அசோக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் முடுக்கி விடும் பணியில் ஈடுபட்டுள்ளாா். வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி உடுப்பி, குடகு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் 3 அல்லது 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் போதுமான அளவு பணம் இருப்பு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது. நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.
கலெக்டர்கள் நேரில் சென்று...
மைசூருவில் இருந்த ேதசிய பேரிடர் மீட்பு படைகள், குடகு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மங்களூருவில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் உள்ளது. இதுபோல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களிலும் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படுவதால், அதுபோன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மழை பாதித்த மாவட்டங்களில் மீட்பு குழுவினருடன், தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீஸ்காரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாவட்ட கலெக்டர்கள் நேரில் சென்று, அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டுள்ளேன்.
144 தடை உத்தரவு
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா கெரூர் டவுனில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் உருவாகி இருக்கிறது. இது சொந்த பிரச்சினைக்காக உருவான மோதல் ஆகும். என்றாலும், கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதி திரும்புவதற்காக அங்கு 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இருதரப்பினரும் அமைதியாக செல்லும்படி அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.