கர்நாடகத்தில் ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கைக்கு அனுமதி-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
கர்நாடகத்தில் ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
ஆராய்ச்சி மையங்கள்
மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் சங்கல்ப் சித்தி விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
பெங்களூருவில் 400-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. பெங்களூரு தவிர உலகின் வேறு எந்த நகரத்திலும் இந்த அளவுக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள் இல்லை. கர்நாடகத்தில் வேலை வாய்ப்பு கொள்கையை உருவாக்கியுள்ளோம். வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும்.
மின்சார வாகன கொள்கை
மின்சாதனத்தில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் கொள்கை, மின்சார வாகன கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. தற்போது ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கைக்கு மந்திரிசபையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி பணிகளுக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கப்படும். இந்த துறைகளில் ரூ.110 லட்சம் கோடி முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
நமது நாட்டில் அம்ருத காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.
பொருளாதார பங்களிப்பு
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் கர்நாடகம் பிற வளர்ந்த நாடுகைளே பின்னுக்கு தள்ளியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் டாலர் என்பது ரூ.80 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். அதில் கர்நாடகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார பங்களிப்பை அளிக்க இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்றி வருகிறது. கர்நாடகத்தில் 10 வகையான விவசாய காலநிலை பகுதிகள் உள்ளன.
உணவுத்துறை உணவு பாதுகாப்பை வழங்குவதுடன் பொருளாதார பாதுகாப்பையும் வழங்குகிறது. அதனால் முதலீட்டாளர்கள் உணவுத்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் கொள்கை நாட்டை மேலும் பலப்படுத்தியுள்ளது. தற்சார்பு திட்டத்தால் நாட்டு மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தொலைநோக்கு பார்வை, திறன் மிக்க தலைவர் நமக்கு தேவைப்படுகிது. அந்த குணங்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.