தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு அவசரகதியில் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருக்கிறது; டி.கே.சிவக்குமார் பேட்டி


தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு அவசரகதியில் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருக்கிறது; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு அவசரகதியில் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருப்பதாக மாநில காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெலகாவி:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டிக்கெட் எதிர்பார்க்கிறார்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதால் அதிகம் பேர் டிக்கெட் எதிர்பார்க்கிறார்கள். அனைவரையும் சம்மதிக்க வைத்து தொகுதிக்கு ஒருவரை வேட்பாளராக அறிவிப்போம். பஞ்சமசாலி சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு முதலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அதன்பிறகு நாங்கள் எங்களின் கருத்தை தெரிவிக்கிறோம்.

சட்டத்தின்படி முடிவு எடுக்க வேண்டும். தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. இதை மத்திய அரசு மாநிலங்களவையில் கூறியுள்ளது. கர்நாடக அரசு அவசரகதியில் இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.

எந்த பயனும் இல்லை

உண்மையிலேயே தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதை செய்யாமல், இங்கு என்ன செய்தாலும் எந்த பயனும் இல்லை. தலித்-பழங்குடியின மக்களுக்கு நாங்கள் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று சொல்வதற்காக இங்கு சட்ட மசோதாவை அவசரகதியில் கொண்டு வந்துள்ளனர். இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி நாகமோகன்தாஸ் குழுவை அமைத்ததே நாங்கள் தான்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story