அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் -சீனிவாச பிரசாத் எம்.பி. அறிவிப்பு
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சீனிவாச பிரசாத் எம்.பி. அறிவித்துள்ளார்.
மைசூரு:
சீனிவாச பிரசாத் எம்.பி.
பா.ஜனதா மூத்த தலைவரும், சாம்ராஜ்நகர் தொகுதி எம்.பி.யுமான சீனிவாச பிரசாத், நேற்று முன்தினம் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது எம்.பி. பதவி காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இத்துடன் எனது அரசியல் காலத்தை முடித்து கொள்கிறேன். அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளை சந்தித்து அனுபவித்து இருக்கிறேன். இனிமேல் எனக்கு அரசியல் வேண்டாம். இது எனது அரசியல் வாழ்க்கையின் கடைசி காலகட்டம்.
அரசியலில் இருந்து ஓய்வு
நான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஓய்வுபெற திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது தொகுதி மக்கள், நலம் விரும்பிகள் தோல்வி அடைந்துவிட்டு ஓய்வு பெற வேண்டாம் என்றும், வெற்றி அடைந்த பிறகு ஓய்வு பெறுங்கள் என கூறினர். அதனால் தான் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டேன்.
எனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இனிமேல் என்னால் நடக்க முடியாது. இதனால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறேன். இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் 14 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்விகளை சந்தித்து உள்ளேன். மத்திய மந்திரி, மாநில மந்திரியாக மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். இது எனக்கு போதும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரி மற்றும் மாநில மந்திரியாக இருந்த சீனிவாச பிரசாத், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.