போலீஸ்காரர்கள் எனக்கூறி 3 பேரை மிரட்டி ரூ.1.12 கோடி தங்கம் கொள்ளை


போலீஸ்காரர்கள் எனக்கூறி 3 பேரை மிரட்டி ரூ.1.12 கோடி தங்கம் கொள்ளை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரர்கள் எனக்கூறி 3 பேரை மிரட்டி ரூ.1.12 கோடி தங்கத்தை கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

நகைகள் வாங்க வந்தனர்

ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது காதிர் பாஷா. இவர், தங்க நகை வியாபாரி ஆவார். இவரிடம் அப்துல் ரசாக் என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், வியாபாரத்திற்காக பெங்களூருவுக்கு சென்று தங்க கட்டிகள் வாங்கி வரும்படி அப்துல் ரசாக்கிடம் ரூ.56 லட்சத்தை முகமது காதிர் பாஷா கொடுத்து அனுப்பி வைத்திருந்தார். அதன்படி, அவரும் தனியார் பஸ்சில் பெங்களூருவுக்கு வந்திருந்தார். உப்பார்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இதுபோல், ராய்ச்சூரை சேர்ந்த தினேஷ் என்ற நகை வியாபாரி தன்னிடம் வேலை செய்யும் மல்லய்யாவிடம் ரூ.75 லட்சத்தை கொடுத்து பெங்களூருவுக்கு சென்று தங்க கட்டிகள் வாங்கி வரும்படி அனுப்பி வைத்திருந்தார். மல்லய்யா தனது மகன் சுனில்குமாரையும் பணத்துடன் பெங்களூருவுக்கு அழைத்து வந்திருந்தார். மெஜஸ்டிக் அருகே தந்தையும், மகனும் அறை எடுத்து தங்கி இருந்தார்கள்.

போலீஸ்காரர்கள் எனக்கூறி...

நேற்று முன்தினம் சிக்பேட்டை அருகே ராஜா மார்க்கெட்டுக்கு சென்று அப்துல் ரசாக் ரூ.56 லட்சத்திற்கு தங்க கட்டிகளையும், அதுபோல், ரூ.75 லட்சத்திற்கு 1½ கிலோ தங்க கட்டிகளையும் மல்லய்யா வாங்கினர். பின்னர் தங்கும் விடுதியில் தங்கி இருந்த 2 பேரும், நேற்று முன்தினம் இரவு ராய்ச்சூர் செல்வதற்காக தங்க கட்டிகளை பைகளில் வைத்து கொண்டு அனந்தராவ் சர்க்கிளுக்கு வந்தனர். அப்போது அப்துல் ரசாக்கும், மல்லய்யாவின் மகன் சுனில்குமாரும் தங்க கட்டிகள் இருந்த பைகளை எடுத்து கொண்டு கழிவறைக்கு சென்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் போலீஸ்காரர்கள் என்று கூறிக் கொண்டு 2 பேர் வந்தனர். அவர்கள் கடந்த 3 மாதமாக உங்களை கவனிக்கிறோம், சட்டவிரோத தொழில் செய்கிறீர்கள், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி கூறி மிரட்டினார்கள். இதனால் 2 பேரும் அதிர்ச்சி அடைந்து தாங்கள் 2 பேரும் வியாபாரிகள் என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.

ரூ.1.12 கோடி தங்கம் கொள்ளை

பின்னர் சுனில்குமார், அப்துல்ரசாக்கை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அனந்தராவ் சர்க்கிளுக்கு வந்து, அங்கிருந்த மல்லய்யாவிடம் இருந்த ரூ.19 ஆயிரத்தையும் பறித்து கொண்டனர். அதன்பிறகு, ரேஸ் கோர்ஸ் ரோடு அருகே 3 பேரையும் இறக்கி விட்டு தங்க கட்டிகள் இருந்த பைகளை கொள்ளையடித்து கொண்டு 2 மர்மநபர்களும் தப்பி சென்றுவிட்டனர். அதாவது 2 கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும்.

ராய்ச்சூரில் இருந்து தங்க கட்டி வாங்க வந்திருப்பது பற்றி நன்கு அறிந்த நபர்களே, போலீஸ்காரர்கள் எனக்கூறி, இந்த கொள்ளையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story