ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்து சேர்ந்தன...!
ராமர் சிலை செதுக்குவதற்கு தேவையான அபூர்வ பாறைகள் நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்து சேர்ந்தன.
அயோத்தி,
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவிலை திறக்கும்வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கோவில் கர்ப்பகிரகத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட உள்ளது. அதை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன.
இவை 6 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை. இந்த பாறைகள், 2 சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு, கடந்த மாதம் 25-ந் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்டன. விசுவ இந்து பரிஷத் தேசிய செயலாளர் ராஜேந்திரசிங் பங்கஜ் உடன் பயணித்தார்.
இந்த பாறைகள், நேற்று முன்தினம் இரவு அயோத்திக்கு வந்து சேர்ந்தன. நேற்று பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர். நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார். இந்த பாறைகளில் இருந்து செதுக்கப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும்.