கேட்பாரற்று சாலையோரம் கிடந்த ரூ.10 லட்சத்தால் பரபரப்பு

கேட்பாரற்று சாலையோரம் கிடந்த பையில் ரூ.10 லட்சம் இருந்தது. அந்த பணத்தில் மது குடித்து செலவளித்த தமிழக தொழிலாளியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேட்பாரற்று சாலையோரம் கிடந்த ரூ.10 லட்சத்தால் பரபரப்பு
Published on

மங்களூரு;-

ரூ.10 லட்சம் பணம்

தமிழ்நாடு கன்னியாகுமரிய சேர்ந்தவர் சிவராஜ் (வயது 49). கூலி தொழிலாளியான இவர் தனது குடுமபத்துடன் மங்களூரு அருகே போந்தல் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இவரது மகள் பி.யூ.சி. படித்து வருகிறார். சிவராஜ் சரியாக வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு செல்லாமலும் மது அருந்தி சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 29-ந்தேதி சிவராஜ், பம்ப்வெல் மேம்பாலம் அருகே உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர் அங்குள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த பையை எடுத்து சிவராஜ் பார்த்துள்ளார். அந்த பைக்குள் கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.2,000 நோட்டு கட்டுக்கள் இருந்தன.

மொத்தம் அந்த பையில் ரூ.10 லட்சம் வரை இருந்தது.இதனை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அவருடன் வந்த மற்றொரு தொழிலாளியும் பார்த்துள்ளார்.

பங்கு பிரித்தனர்

இதையடுத்து அவர்கள் 2 பேரும் மீண்டும் மதுக்கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் உல்லால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்றதும் மற்றொரு தொழிலாளி சிவராஜிடம் கண்டெடுத்த பணத்தில் பங்கு கேட்டுள்ளார். அப்போது சிவராஜ், அந்த பையில் இருந்து ரூ.500 நோட்டு இருந்த ஒரு கட்டையும், ரூ.2,000 நோட்டு இருந்த ஒரு கட்டையும் கொடுத்துள்ளார். பின்னர் மீதி இருந்த நோட்டு கட்டுகளை தனது இடுப்பில் வைத்து சிவராஜ் சென்றார். அந்த தொழிலாளி அங்கிருந்து சென்றுவிட்டார்.பணம் அதிகளவு இருந்ததால், மீண்டும் மதுக்கடைக்கு சென்று சிவராஜ் மது அருந்தி உள்ளார். இந்த நிலையில் சிவராஜிடம் கட்டுக்கட்டாக அதிகளவு பணம் இருந்ததால், சந்தேகம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், கங்கனாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீசார் சிவராஜ பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் அவரிடம் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர். இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சாலையோரம் ஒரு பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதனை எடுத்து வந்ததாகவும், சில கட்டுகளை தன்னுடன் வந்த தொழிலாளியிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். தன்னிடம் இருந்த பணத்தில் ரூ.1000-த்தை மட்டும் எடுத்து மது அருந்தியதாகவும் தெரிவித்தார். சிவராஜிடன் பணத்தை வாங்கி சென்ற மற்றொரு தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆனால் பணத்தை காணவில்லை என்று இதுவரை எந்த புகாரும் பதிவாகவில்லை. இதனால் அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. இதனால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com