பெங்களூருவில் ரூ.1.34 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்த வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்திருந்தார்கள். அந்த கும்பல்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த போதைப்பொருட்களை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, மத்திய குற்றப்பிரிவு இணைபோலீஸ் கமிஷனர் சரணப்பா பார்வையிட்டார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
11 பேர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் நகரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது மடிவாளா, பானசவாடி, பண்டேபாளையா, சுத்தகுண்டே பாளையா, கே.ஆர்.புரம் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 பேர் கென்யா, தான்சானியா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கும்பலினர் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க புதுவிதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார்கள். இதற்காக குறிப்பிட்ட இடத்தில் போதைப்பொருட்களை கைதான கும்பல் வைத்து விடுவார்கள். அந்த இடத்தை புகைப்படம் எடுத்து கொண்டு, அதனை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைப்பார்கள்.
விற்பனை பிரதிநிதிகள்
அந்த இடத்தின் வரைப்படத்தையும், அந்த கும்பல் வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்து விடுவார்கள். இதனை பயன்படுத்தி கொண்டு கைதான கும்பல் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் போதைப்பொருட்களை எடுத்து சென்று பயன்படுத்தி வந்துள்ளனர். கைதான நபர்களுக்கு போதைப்பொருட்களுக்கான பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்திருந்தனர்.
இதுதவிர போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்காக விற்பனை பிரதிநிதிகளையும் நியமித்திருந்தனர். அதாவது உணவு, பிறபொருட்களை வீடுகளுக்கே எடுத்து சென்று கொடுப்பது போல், போதைப்பொருட்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கைதான கும்பல் எடுத்து சென்று கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதன்மூலம் போலீசாரிடம் சிக்காமல் அநத கும்பலினர் இருந்து வந்தனர்.
ரூ.1.34 கோடி மதிப்பு
கடந்த ஒரு மாதமாக அந்த கும்பலை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். போலீசாரின் ஒரு மாத காலமாக எடுத்த நடவடிக்கையின் மூலமாக தற்போது 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து ரூ.1.34 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., போதைப்பவுடர், மாத்திரைகள், ஆசிஷ் ஆயில் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் 11 பேர் மீதும் மடிவாளா, பண்டேபாளையா, சுத்த குண்டே பாளையா, கே.ஆர்.புரம் மற்றும் பானசவாடி போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்று வந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.