வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை; முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விராஜ்பேட்டையில் வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடகு;
விவசாயி
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே அருகே படகா கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பா. விவசாயி. இவரது மனைவி ஜானகி. இவர்கள் அந்தப்பகுதியில் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கப்பாவும், ஜானகியும் வீட்டில் இருந்தனர்.
இரவு 9 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. இதனால் ஜானகி, கதவை திறந்து பார்த்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
ரூ.2.64 லட்சம் நகை-பணம்
பின்னர் அவர்கள், ஜானகியின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கப்பா, அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது மர்மநபர்கள், தங்கப்பாவையும், ஜானகியையும் தாக்கினார்கள். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், ஜானகி அணிந்திருந்த ரூ.64 ஆயிரம் மதிப்பிலான தங்க நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சித்தாப்புரா போலீசில் தங்கப்பா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு அய்யப்பா, துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திர பிரசாத் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டுக்கு பார்வையிட்டனர். இதுகுறித்து சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.