ரூ.2 ஆயிரம் மாயம்: ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை - அவமானத்தால் மாணவி தற்கொலை
ஆடைகளை களைந்து சோதனை செய்ததால் மனமுடைந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகல்கோட்டை,
கர்நாடகாவில், திருடியதாக குற்றம்சாட்டி சக மாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை களைந்து சோதனை செய்ததால், மனமுடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அவரது பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது. இது தொடர்பாக அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மீது அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் ஆசிரியை பணம் குறித்து கேட்க, தான் எடுக்கவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார்.
எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியை, மாணவியின் ஆடைகளை, சக மாணவிகளைக் கொண்டு களைந்து சோதனையிட்டுள்ளார். இதனால் மிகுந்து அவமானத்துடன் வீடு திரும்பிய மாணவி, மனவேதனையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.