டாக்டர்களின் தவறால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி


டாக்டர்களின் தவறால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி
x

டாக்டர்களின் தவறால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகம் மாநிலம் பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 52). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு(2004) குடல் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகும் பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு மற்றும் முதுகில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சையின்போது 3.2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட அறுவை சிகிச்சை ஊசி ஒன்று உடலுடன் வைத்து தைக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் பத்மாவதி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான விசாரணையின்போது அறுவை சிகிச்சையின்போது அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் 2 பேரும் சேர்ந்து பத்மாவதிக்கு ரூ.50 ஆயிரம் மருத்துவ செலவுக்காக இழப்பீடாக வழங்க வேண்டும் என்றார். மேலும் பத்மாவதி காப்பீடு செய்த நிறுவனம், அவருக்கு ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்கிடவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது.


Next Story