சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் 'சீட்' வாங்கி தருவதாக ரூ.7 கோடி மோசடி; இந்து அமைப்பை சேர்ந்த பெண் நிர்வாகி கைது


சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் வாங்கி தருவதாக ரூ.7 கோடி மோசடி; இந்து அமைப்பை சேர்ந்த பெண் நிர்வாகி கைது
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.7 கோடி வாங்கி மோசடி செய்த இந்து அமைப்பின் பெண் பிரமுகர், பா.ஜனதா பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்தவர் கோவிந்தபாபு பூஜாரி. தொழில்அதிபரான இவருக்கு, உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பின் பிரமுகரான சைத்ரா குந்தாபுராவுடன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் பழக்கம் ஏற்பட்டது. தான் இந்து அமைப்பின் பிரமுகர் என்பதால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நல்ல பழக்கம் இருப்பதாக கோவிந்தபாபுவிடம் சைத்ரா கூறியுள்ளார்.

இதனை நம்பிய அவரும், கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் பைந்தூர் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி கொடுக்கும்படியும் சைத்ராவிடம் கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பா.ஜனதாவில் சீட் வாங்கி தருவதாக கூறி அவரிடம் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு தவணையாக ரூ.7 கோடியை சைத்ரா வாங்கி இருந்தார்.

ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சார்பில் சீட் வாங்கி கொடுக்காமலும், ரூ.7 கோடியை திரும்ப கொடுக்காமலும் சைத்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி செய்திருந்தார்கள். இதுகுறித்து பெங்களூரு பண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் சைத்ரா உள்பட 7 பேர் மீது கோவிந்தபாபு புகார் அளித்தார். இந்த மோசடியை

தீவிரமாக எடுத்து கொண்ட போலீசார், வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி இருந்தனர். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தொழில்அதிபரிடம் ரூ.7 கோடி மோசடி செய்ததாக சைத்ரா, அவரது கூட்டாளிகள் ககன் கடூரு, தன்ராஜ், ரமேஷ், ஸ்ரீகாந்த், பிரசாந்த் பைந்தூரு ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தொழில்அதிபர் கோவிந்தபாபு சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இந்து அமைப்பின் பிரமுகரான சைத்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள் வரை நல்ல தொடர்பில் இருப்பதாக சைத்ரா கூறியுள்ளார். சைத்ராவுக்கு ஆதரவாக பா.ஜனதாவின் யுவ மோர்ச்சா பிரமுகரான ககன் கடூரு இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என விஸ்வநாத் ஜி என்பவரை கோவிந்தபாபுவிடம் அறிமுகம் செய்துள்ளனர்.

இதனால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து விடும் என்று கருதி ஜூலை மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ரூ.7 கோடி வரை கோவிந்தபாபு கொடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் விஸ்வநாத் ஜி இறந்து விட்டதாக கோவிந்தபாபுவிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தனக்கு தெரிந்த நபர்களிடம் கோவிந்தபாபு விசாரித்துள்ளார். அப்போது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் விஸ்வநாத் ஜி என்ற எந்த ஒரு தலைவரும் இல்லை என்று அவருக்கு தெரிந்துள்ளது.

உடனே சுதாரித்து கொண்ட கோவிந்தபாபு, சைத்ராவிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் சரியான பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு பைந்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வேறு ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.

இதனால் தன்னிடம் ரூ.7 கோடி வாங்கி சைத்ரா உள்ளிட்டோர் மோசடி செய்திருப்பதை உணர்ந்த கோவிந்தபாபு பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது சைத்ரா மற்றும் ககன் கடூரு என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான சைத்ரா உள்ளிட்ட 6 பேரும் நேற்று மாலையில் பெங்களூரு 1-வது கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 23-ந் தேதி வரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, 6 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிந்தபாபு தவிர வேறு யாரிடமும் சைத்ரா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்களா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story