ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் திருட்டு
ஒசநகர் அருகே ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் புகுந்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா:
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஈசுவரப்பா. இவர் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தீர்த்தஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்வையிட்டார். அப்போது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
ரூ.7½ லட்சம் திருட்டு
மேலும் பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை-பணம் மாயமாகி இருந்தது. அப்போது தான் யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.7½ லட்சம் நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.