ரூ.700 கோடி மோசடி: 9 பேர் கைது - பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?


ரூ.700 கோடி மோசடி: 9 பேர் கைது - பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?
x

கோப்புப்படம்

வேலைவாய்ப்பு சார்ந்த முதலீட்டு திட்டம் மூலம் ரூ.700 கோடி மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐதராபாத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், வேலைவாய்ப்பு சார்ந்த முதலீட்டு திட்டம் என்று கூறி தன்னிடம் ஆன்லைன் வாயிலாக ரூ.28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரலில் ஐதராபாத் சைபர்கிரைம் பிரிவில் புகார் தெரிவித்தார்.

அதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரித்தபோது, போலியான நிறுவனங்களின் 48 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில், வேலைவாய்ப்பு சார்ந்த முதலீட்டு திட்டம் என்ற பெயரில் மோசடியாக ரூ.584 கோடி திரட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஐதராபாத் நபர்கள்

அந்த வங்கி கணக்குகளில் ஒன்று, ஐதராபாத்தைச் சேர்ந்த ராதிகா மார்க்கெட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முனவர் என்பவரின் பெயரில் ஒரு செல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது.

முனவர் மற்றும் அவரது உதவியாளர்களான அருள்தாஸ், ஷா சுமைர், சமீர் கான் ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றுள்ளனர். அந்த நகரத்தைச் சேர்ந்த மணிஷ், விகாஷ், ராஜேஷ் என்ற மூவர் கூறியபடி அங்கு அவர்கள் சென்றிருக்கின்றனர். அவர்களது பெயரில் செயல்படுத்தும் வகையில் போலியான நிறுவனங்களுக்காக வங்கி கணக்குகளை திறக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டிருக்கிறது.

போலி நிறுவன வங்கி கணக்குகள்

அதன்படி அவர்கள், 33 போலி நிறுவனங்களுக்காக 61 வங்கி கணக்குகளை திறந்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு ஒரு கணக்குக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. திறந்த வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களையும், அந்த கணக்குகளை அணுகும் வழி குறித்த தகவல்களையும் மணிசிடம் முனவர் உள்ளிட்டோர் ஒப்படைத்திருக்கின்றனர்.

மேலும் பல வங்கி கணக்குகளில் ரூ.128 கோடி பணம் போடப்பட்டிருந்ததும் பின்னர் தெரியவந்தது.

ஆயிரக்கணக்கானவர்களிடம் மோசடி

வேலைவாய்ப்பு சார்ந்த முதலீட்டு திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் மோசடி செய்து இந்த பணம் திரட்டப்பட்டிருக்கிறது. சுமார் ஓராண்டு காலமாக இந்த மோசடி நடந்து வந்திருக்கிறது.

'யூடியூப் வீடியோக்களை' 'லைக்' செய்வது, 'கூகுள் ரிவியூ' எழுதுவது போன்ற எளிய வேலைகளைச் செய்தால் போதும், நல்ல வருவாய் அளிக்கப்படும் என்று கூறி ஏராளமானோர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சீனர்களின் கையாட்களாக...

இதன் பின்னணியில் வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு குழுமமும், சீனர்களும் இருப்பது தெரியவந்தது. சீனர்களின் கையாட்களாக இந்தியர்கள் செயல்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 'கிரிப்டோ வேலட்' மூலம் வெளிநாடுகளுக்கு மோசடி பணம் அனுப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதி, லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹெஸ்புல்லா என்ற பயங்கரவாத இயக்கத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் ஒரு கிரிப்டோ கணக்கில் போடப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

ஐதராபாத் போலீஸ் சைபர்கிரைம் பிரிவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையமும் இதை கண்டுபிடித்திருக்கின்றன.

9 பேர் கைது

இந்த வேலைவாய்ப்பு, முதலீட்டு மோசடி தொடர்பாக இதுவரை நாடு முழுவதிலும் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 4 பேர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள், குஜராத் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள் 3 பேர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.


Next Story