கர்நாடகத்தில் கால்வாய் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.800 கோடி முறைகேடு-சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் கால்வாய் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.800 கோடி முறைகேடு என சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ராய்ச்சூர் மாவட்டம் லிங்ககூகூர் மற்றும் தேவதுர்கா தாலுகா நாராயணபுரா கால்வாய் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,619 கோடி டெண்டருக்கு கர்நாடக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த டெண்டர் முன்னாள் எம்.எல்.ஏ. மானப்பா வஜ்ஜல் சகோதரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த பணியும் நடைபெறாமல் ஒப்பந்ததாரருக்கு ரூ.425 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. ஹுலிகேரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் முதல்-மந்திரி, ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தார்.
அந்த குழு பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அளித்தது. ஏற்கனவே மண் நிரப்பப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் மண் நிரப்பப்படுவதாக ஒப்பந்ததாரர் சொல்கிறார். ஆனால் மீண்டும் மண் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒப்பந்ததாரர், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். எந்த பணியும் செய்யாமல் ரூ.800 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த முறைகேடு குறித்து சட்டசபை கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த முறைகேட்டுக்கு நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.