வியாபாரி வீட்டில் ரூ.12½ லட்சம் நகை, பணம் திருட்டு
குட்டூர் கிராமத்தில் துணிகரமாக வியாபாரி வீட்டில் ரூ.12.50 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். காய்கறி வியாபாரியான இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் சில மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சீனிவாஸ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவில் இருந்து ரூ.2½ லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
திருட்டுப்போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.12½ இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சீனிவாஸ் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது திருட்டு சம்பவம் குறித்து அறிந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.