ஹாசனாம்பா தேவி கோவிலில் ரூ.3.69 கோடி உண்டியல் வருவாய்


ஹாசனாம்பா தேவி கோவிலில் ரூ.3.69 கோடி உண்டியல் வருவாய்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி நடை திறக்கப்பட்ட ஹாசனாம்பா தேவி கோவிலில் ரூ.3.69 கோடி உண்டியல் வருவாய் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹாசன்:

ஹாசனாம்பா தேவி கோவில்

ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஹாசனாம்மா தேவி கோவில். இந்த கோவில் ஆண்டு தோறும் தீபாவளியையொட்டி 10 நாட்களுக்கு மேல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 13-ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நடை திறக்கப்பட்டது.

முதல் நாள் கோவில் சுத்தம் செய்யப்பட்டதால் அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து 14-ந் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் 25-ந் தேதி சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டது. அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கவில்லை.

13 நாட்கள் தரிசனம்

பின்னர் 26-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. 27-ந் தேதி ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. அப்போது சாமிக்கு பிரசாதம் வைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது. மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை வழங்கினர். சிலர் சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்றுதான் ஹாசனாம்பாவை வழிப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி சிறப்பு தரிசனம் டிக்கெட் மற்றும் பிரசாதம் விற்பனை பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 100 அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வங்கி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முன்னிையில் இந்த கோணிக்கை எண்ணப்பட்டது.

ரூ.3.69 கோடி வருவாய்

அதன்படி ஹாசனாம்பா தேவி உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 80 லட்சத்து 17 ஆயிரத்து 600 வருவாய் கிடைத்தது. அதேபோல சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் ரூ.1 கோடியோ 48 லட்சத்து 27 ஆயிரத்து 600 கிடைத்தது. சித்தேஷ்வர் சாமி கோவில் உண்டியல் மூலம் ரூ.8 லட்சத்து, 23 ஆயிரத்து 485-யும், பிரசாதம் விற்பனை மூலம் ரூ.32 லட்சத்து 82 ஆயிரத்து 716 கிடைத்துள்ளது.

மொத்தம் அனைத்தும் சேர்த்து ரூ.4.30 கோடி வருவாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதில் ஹாசனாம்பா தேவி கோவில் உண்டியல் மூலம் மட்டும் ரூ.3 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 251 என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story