முஸ்லிம் ஓட்டுக்காக ஆர்.எஸ்.எஸ். பற்றி ராகுல்காந்தி அவதூறாக பேசுகிறார்
முஸ்லிம் ஓட்டுக்காக ஆர்.எஸ்.எஸ். பற்றி ராகுல்காந்தி அவதூறாக பேசுகிறார் என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.
ஹாசன்:
மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், ஹாசனுக்கு நேற்று வந்து ஹாசனாம்பா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரசின் மூத்த தலைவர்கள் 40 ஆண்டுகளாக அக்கட்சியில் பணியாற்றி தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்ததும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். குடும்ப கட்சிக்கு எதிராக பல காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க தயாராக இல்லை. இந்த நேரத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால்சமுதாயத்தின் மூத்த தலைவர்கள் களமிறங்கி நடவடிக்கை எடுப்பார்கள். சாதி, மொழி தொடர்பாக மோதல் ஏற்பட்டால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினால் அதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இந்தியா என்றால் என்னவென்று தெரியாதவர்கள், நாட்டின் கலாசாரம் பற்றி தெரியாதவர்கள், மண்ணின் வாசனை இல்லாதவர்கள் ஒற்றுமை பாதயாத்திரை நடத்துகிறார்கள். தேர்தல் நடக்கும் இடங்களில் சென்றாலே ராகுல்காந்தி கட்சியின் தேசிய தலைவராக ஏற்று கொள்ளப்பட்டிருப்பார். உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் முற்றிலும் மூழ்கி கிடக்கிறது.
முஸ்லிம் ஓட்டுகளை பெற...
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தேவையின்றி பேசுவதை மக்கள் கவனித்து வருகின்றனர். முஸ்லிம் ஓட்டுகளை பெற ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறாக பேசுகிறார். பாதயாத்திரை மூலம் ஒரு தாலுகாவில் 4 கி.மீ. வரை நடப்பதில் நாடு என்ன என்பதை ராகுல்காந்தி புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் பாதயாத்திரைக்கு பாரத் ஜோடோ என்று இருக்கும் பெயரை மாற்றச் சொல்லுங்கள்.
அந்த பெயரை நீக்கிவிட்டு கர்நாடகத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் செய்யும் யாத்திரை என்று மாற்றுங்கள். எங்கிருந்தோ பஸ் ஏறி ஆட்களை ஏற்றிச் செல்வதையும், இரவில் ஏதோ ஒரு இடத்தில் தங்கி தூங்கிவிட்டு காலையில் கிளம்புவதையும் கண்கூடாக பார்க்கிறோம். காங்கிரசின் உட்கட்சி பூசலுக்குதான் 'ஜோடோ' செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவருடன் ஹாசன் நகர பா.ஜனதா தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.