ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதற்காக தடை செய்யப்பட வேண்டும்- சித்தராமையாவுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதற்காக தடை செய்யப்பட வேண்டும் என்று சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
கூடுதல் ஆதாரங்கள்
பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா கூறுகிறார். இதன் மூலம் பி.எப்.ஐ. போன்ற அமைப்புகளுடன் காங்கிரசுக்கு இருக்கும் உறவு வெளிப்படுகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது தான் பி.எப்.ஐ. அமைப்பு மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அந்த அமைப்பு மீதான குற்றச்சாட்டுகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் வேண்டுமா?.
அரசியல் செய்ய முடியாது
ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி அமைப்பு. ஒவ்வொரு விவகாரத்திலும் சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை கூறாவிட்டால் சித்தராமையாவால் அரசியல் செய்ய முடியாது.
எதற்காக ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும்?. தேசபக்தி பணிகளை செய்யும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டுமா?. அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு சித்தராமையா கருத்து கூறுவது சரியல்ல. எஸ்.டி.பி.ஐ. அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு வரும் நாட்களில் முடிவு செய்யும். அந்த அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது. அதை தடை செய்ய வேண்டு மென்றால் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
கடும் நடவடிக்கை
பி.எப்.ஐ. மீதான நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அந்த அமைப்பினர் தான் அவரை கொலை செய்ய முயற்சி செய்தனர். அந்த அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறினார். ஆனால் தற்போது அவர், அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசின் முடிவை குறை சொல்கிறார். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, 'நாட்டில் இறையாண்மையை பாதுகாக்கவும், ஒற்றுமையை நிலைநாட்டவும், அமைதியை ஏற்படுத்தவும் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கை. சமீபத்தில் அந்த அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி ஆவணங்களை சேகரித்தது' என்றார்.
துணிச்சலான முடிவு
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், 'பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் நடவடிக்கையாக பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பை வளா்த்ததே காங்கிரஸ் தான்' என்றார். மந்திரி சுனில்குமார், 'பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். பி.எப்.ஐ. அமைப்பு கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை தூண்டிவிட்டு வந்தது' என்றார்.