விஜயாப்புரா மாநகராட்சி தேர்தலில் ஆளும் பா.ஜனதா வெற்றி
விஜயாப்புரா மாநகராட்சி தேர்தலில் ஆளும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 17 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
பெங்களூரு:
பா.ஜனதா வெற்றி
விஜயாப்புரா மாநகராட்சிக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தம் உள்ள 35 வார்டுகளுக்கு 174 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவற்றில் ஆளும் பா.ஜனதா 33 வார்டுகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 35 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 15 வார்டுகளிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளிலும்
போட்டியிட்டது. 58 பேர் சுயேச்சையாக களம் கண்டனர். இந்த நிலையில் விஜயாப்புரா மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 179 அலுவலர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 35 வார்டுகளுக்கும் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதில் ஆளும் பா.ஜனதா 17 வார்டுகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 10 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) ஒரு வார்டிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 2 இடங்களிலும், 5 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அந்த மாநகராட்சியில் பெரும்பான்மை பலத்திற்கு 18 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜனதா 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆதரவு தேவை
பெரும்பான்மையை பெற அக்கட்சிக்கு ஒரு கவுன்சிலரின் ஆதரவு தேவை. அதனால் விஜயாப்புரா மாநகராட்சியில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல் கொள்ளேகால் நகரசபையில் 7 வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6-ல் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.