ஓடும் கிரேன் தீப்பிடித்து எரிந்தது:3 பேர் உயிர் தப்பினர்
பெங்களூரு எலச்சனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஓடும் கிரேன் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிர் தப்பினர்.
எலச்சனஹள்ளி:-
பெங்களூரு வர்த்தூரில் இருந்து எலச்சனஹள்ளி நோக்கி நேற்று முன்தினம் இரவு பெரிய கிரேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 பேர் சென்றனர். அந்த கிரேன் எலச்சனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரேனில் இருந்தவர்கள், உடனடியாக கிரேனை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் தீ கிரேனில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், 2 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள், கிரேன் மீது பிடித்து எரிந்த தீ மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில், கிேரனின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. தீப்பிடித்து எரிந்ததும் கிரேனில் இருந்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேனில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.