டெல்லியில் ரஷிய துணை பிரதமர் மற்றும் மத்திய வெளிவிவகார மந்திரி சந்திப்பு
டெல்லியில் ரஷிய துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் மற்றும் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,
ரஷியாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார். அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் முதல் நாளில் ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷியா சார்பில் தலைமையேற்றார்.
அவர் இந்த கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24-வது ஐ.ஜி.சி. கூட்டம் பற்றி இன்று இறுதி முடிவு செய்யப்படுகிறது.
இந்த சூழலில், டெல்லியில் ரஷிய துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் மற்றும் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினர். இவர்களது சந்திப்பு 2-வது நாளாக இன்றும் நடந்தது. புதுடெல்லியில் நேற்று நடந்த சந்திப்பில், இந்தியா மற்றும் ரஷியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். இதுபற்றி குறிப்பிட்ட மான்டுரோவ், யூரேசியன் பொருளாதார ஆணையத்துடன் இணைந்து, நாங்கள் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ரஷியா, வர்த்தகத்தில் தரம் அதிகரிக்க செய்வதில் ஆர்வமுடன் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோக, முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான இந்தியா மற்றும் ரஷியா இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.