பாலியல் புகார்: தேசிய,சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் செல்வது கட்டாயம்...!


பாலியல் புகார்: தேசிய,சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் செல்வது கட்டாயம்...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 15 Jun 2022 4:24 PM IST (Updated: 15 Jun 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

தேசிய, சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டுமென இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ள 'சைக்கிளிங்' போட்டிகளில் பங்கேற்பதற்காக 6 பேர் கொண்ட இந்திய குழு அந்நாட்டிற்கு சென்றது. இந்திய குழுவின் 5 வீரர்கள் ஒரு வீராங்கனை இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டிக்கான குழுவிற்கு ஆர்.கே. சர்மா தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, தலைமை பயிற்சியாளர் ஆர்.கே. சர்மா தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை தருவதாக இந்திய 'சைக்கிளிங்' குழுவில் இடம்பெற்றிருந்த வீராங்கனை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து ஸ்லோவேனியா சென்றிருந்த இந்திய சைக்கிளிங் குழு உடனடியாக நாடு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆர்.கே. சர்மா நிக்கப்பட்டு அவர் மீது துறை ரீதியிலான விசாரணை தொடங்கியுள்ளது.

அதேபோல், ஜெர்மனியில் நடந்த பயிற்சி வகுப்புகளின்போது தனது பயிற்சியாளர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக படகு போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனை ஒருவர் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் இந்திய விளையாட்டுத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் புதிய விதிகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய, சர்வதேச போட்டிகளின் போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story