பட்டுநூல் உற்பத்தியால் பழைய டயர் விற்பனை ஜோர்


பட்டுநூல் உற்பத்தியால் பழைய டயர் விற்பனை ஜோர்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில் பட்டுநூல் உற்பத்தியால் பழைய டயர் விற்பனை ஜோராக நடந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

பட்டுநூல் உற்பத்தி

கோலார் மாவட்டம் தக்காளி உற்பத்தி மட்டுமின்றி காய்கறிகள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. இதேபோல சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பால் உற்பத்திக்கு பெயர் பெற்றது.

அதேபோல இந்த 2 மாவட்டங்களும் பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. அதன்படி கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் பட்டு செடிகள், பட்டுக்கூடு, பட்டுநூல் உற்பத்திகள் அதிகப்படியாக நடந்து வருகிறது.

குறிப்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 4,500 பட்டுநூல் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலைகளில் பட்டுநூல் உற்பத்தி செய்வதற்கு பழைய டயர்களின் பங்கு மிகவும் முக்கியதுவம் என்று கூறினால் மிகையல்ல. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவில் இந்த பழைய டயர்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

இந்த டயர்கள் அனைத்தும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதாவது அங்கு ரூ.15-க்கு வாங்கப்படும் டயர்கள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெந்நீரை கொதிக்க வைக்க...

இந்த டயர்கள் பட்டுக்கூடுவில் இருந்து பட்டுநூலை பிரித்தெடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. அதாவது பட்டுக்கூடுவில் இருந்து பட்டுநூலை பிரித்தெடுப்பதற்கு வெந்நீர் தயாரிக்கப்படுகிறது.

இந்த வெந்நீர் அதிகளவு கொதிக்க வைக்கவேண்டும். அதற்கு விறகுகள் போதுமானதாக அமைவது இல்லை. அந்த விறகுகளுடன் டயர்களை எரிய வைக்கும்போது, இரண்டும் இணைந்து வெகுநேரம் எரியும்.

இதனால் செலவு குறைவதுடன், வெந்நீரும் அதிக நேரம் சூடாக இருக்கும். அப்போது பட்டுக்கூடுகளை அந்த வெந்நீரில் போட்டு, பட்டுநூலை பிரித்துவிடலாம். இதனால் வேலை எளிதாக இருந்தாலும், அதன் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

இதனால் ஆந்திராவில் இருந்து பழைய டயர்களின் வரத்து அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இந்த டயர்களில் இருந்து இரும்பு கம்பிகளை எடுத்து, பின்னர் அந்த டயர்களை துண்டு துண்டாக வெட்டி, எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வேண்டாம் என்று வீசப்படும் டயர்களும் பயன்படுத்தலாம் என்பதை இந்த பட்டுநூல் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்திருப்பதாகவும், பழைய டயர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல இந்த பழைய டயருக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.


Next Story